கடவுள்!
இருக்கிறார்,
இல்லை,
இருந்தால் நல்லாயிருக்கும்,
என்கின்ற
வாதப் பிரதிவாதங்கட்கப்பால்
இதோ “நான்” கடவுள்
அவதரித்து விட்டேன்!
புத்தனைப் போல்
போதி மரத்தடியின்
பௌர்ணமி இரவிலல்லாமல்
அமவாசை கடந்த மூன்றாம்நாள்
விடிகாலைப் பொழுதில்
இடியுடன் கூடிய
அடைமழை பொழிகையில்
ஜன்னலால் தெரிந்த
வெட்டி இறங்கிய
மின்னல் கீற்றுடன்
எனக்குள் அந்த
உளவியல் மாற்றத்தை
உணர்ந்து கொண்டேன்.
பக்தனைப் போல்
வேடம்கொண்டு
பித்தனாய் அலைபவனே
இங்கே வா.
இதோ உன் முன்
கடவுளாய் “நான்”!
முந்து சிவன்,
அவன் மனைவி மாதேவி,
அவர்தம் பிள்ளைகாள்
கணேசன், கந்தன்.
பாற்கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன், அவன்தன்
தொப்புட் கொடி மைந்தன்
பிரம்மன் இவர்களா
உன் கடவுள்?
இல்லை
அல்லா, யேசு போல்
அல்லாமல்,
இப்போதும்
மானிட உருக்கொண்டுலவும்
பாபா, பகவான் அம்மாவா?
அவர்களெல்லாம் சும்மா.
வெறும் பம்மாத்து.
புரிகிறது உன் குழப்பம்.
யாரடா “நான்” என்று.
நன்று.
குழம்பு,
சந்தேகப்படு,
தெளிவடை.
வேண்டுமானால்
வைதேகி தேகம்
தகிக்காத அக்கினியைக்கூட
சந்தேகப் படு.
பின்னொரு நாளில்
சலவைத் தொழிலாளியின் சொற்கேட்டு
சீதையைக் காட்டுக்கனுப்பிய
ராமனிலும் “நீ” மேலாவாய்.
ஆகா எப்படி நம்புவதா?
வாடா வா.
உன்னைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்
மூடனைப் போல்
சொல்வதற்கெல்லாம்
தலையாட்டாமலொரு
சீடனைப் போல்
அந்த இராமகிருஷ்ணருக்கு
வாய்த்த விவேகானந்தனாய் வா.
உனக்குத்தான்
“நான்” காட்சியளிப்பேன்.
“நான்”
இது என்
பதினோராவது அவதாரம்
ஏன்?
இறுதியானதும் கூட.
ஆம்!
“நான்”-ஏ “நான்”-ஆய்
ஆனபின்
இனியெதற்கு
இன்னோரவதாரம்?
தந்தையின் விந்தாய்
தாயின் முட்டைநாடி
“நான்” நீந்திச் சென்றதுவென்
மச்ச அவதாரம்.
ஓவரி (ovary) யிலிருந்து
தாயின் முட்டையை
பலோப்பியன் குழாய் வழியே
“நான்” சுமந்து வந்ததுவென்
கூர்ம அவதாரம்.
முட்டை துளைத்து
விந்து நுழைகையில்
“நான்” கொண்டது
வராக அவதாரம்.
முதற்கலமிரண்டாய் பிரிந்ததை,
பின்,அதுவொரு பிண்டமாய் வளர்ந்ததை
பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு (Big bang)
என்கிறார்கள் பேதை விஞ்ஞானிகள்.
அவர்கள் அந்தப் பிரபஞ்சமே “நான்”
என்பதை அறியாத அஞ்ஞானிகள்.
ஒரு “தூண்”-இற்குளிருந்து
வெளிப்படுவதுவாய்
ஒரு தாயிற்குளிருந்து
“நான்” வெளிப்பட்டது
நரசிம்ம அவதாரம்.
மழலையாய் இருக்கையிலெனை
வாஞ்சையுடன் அணைப்போர்
நெஞ்சில் “கால்”-ஆல் உதைக்கையில்
“நான்” கொண்டது
வாமன அவதாரம்.
ஆறாம் வயதில் கவண் எடுத்து
“வில்”-லாய் விளையாடிப் பலருக்குத்
தொல்லை கொடுத்த
பாலகப்பருவமதில்
“நான்” எடுத்தது
பரசுராம அவதாரம்.
அதன்பின்
பதின்மப் பருவம் வரை
எந்தப் பெணணையும்
ஏறெடுத்தும் பாராததில்
“நான்” பூண்டது
ராம அவதாரம்.
கல்விச் சாலையில்
எழுதுகோல் “ஏர்” பிடித்து
ஏணிப்படிகளாய் வகுப்புகள்
ஏறுகையில்,
“நான” ஏற்றிருந்தது
பலராம அவதாரம்
என் வயதொத்த பெண்கள்
பாரதி சொன்ன பதினாறு வயதுப்
பருவமடைகையில்
கோபியர் சூழ்ந்த
கோபால கிருஷ்ணனாய்
எனக்குள் “நான்” மாறியது
கிருஷ்ண அவதாரம்.
கல்விக்காலம் முடிந்து
கதி கலங்கித் திரிந்ததும்
மாயைகளுக்குள்
மதி மயங்கி நின்றதும்
விதி வலிதென்று
விழி பிதுங்கி நின்றதும்
என்னைத் தேடித்தேடி
எங்கோவெல்லாம்
“நான்” அலைந்ததும்
கல்கி அவதாரம்
ஈற்றில் இதோ
பதினோராவதாய்
“நான்“ அடைந்தது
நான் அவதாரம்.
ஆம் “நான்” கடவுளானவன்
அடேய்!
எதற்காயென் பின்னால்
வருகிறாய்?
“நான்” ஐக் கடவுள்
என்று ஏற்றுக் கொண்டதாலா?
போடா வெண்ணெய்.....
************
கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைபவர்கட்கு:
வெண்ணெயை உருக்கினால் நெய்.
உன்னை ஒருக்கினால் “நீ” கடவுள்.
Friday, November 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கலக்குறீங்க. "நானை" த்தேடி தேடி "நானை" கண்டுபிடித்தீங்கள். நன்றாக உள்ளது. இன்னுமொரு பதிவினை இட்டபின்னர் தமிழ்மணம் திரட்டியில் இணைத்தால் எல்லோரும் பார்க்கலாம். தொடருங்கள். ஆழ்கடல் அமைதிதான். ஆனால் ஆழமும் அதிகம்தான் புரிந்துகொண்டேன் இப்போது.
எல்லோரையும் நானாக்கிய ரஷ்யா துண்டாக சிதறியதை நான் என்ற மமதையுடன் எழுதிய கடவுள் அறிவாரோ....???? ஆழ்கடல் அமைதியும் அதன் ஆழமும் முத்து எடுப்பவனுக்கும் எண்ணெய் எடுப்பவனுக்கும் தேவைப்படலாம் நாம் இறந்த பின் நமது சாம்பலை கரைக்க நமது எச்சங்ளுக்கு தேவைப்படலாம்....!!!!! கடவுள் இல்லை என்று சொல்பவனை நம்பலாம் கடவுள் உண்டு என்று சொல்பவனை ஒரளவு நம்பலாம் தான் தான் கடவுள் என்று சொல்பவனை நம்பவே கூடாது
உனக்கு நான் இல்லாவிட்டால் இதையும் திரட்டியில் இணைப்பாய்===========>>>>>>
இப்படிக்கு நான்
//கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைபவர்கட்கு:
வெண்ணெயை உருக்கினால் நெய்.
உன்னை ஒருக்கினால் “நீ” கடவுள். //
தத்துவம் நல்லா இருக்கே... :)
நண்பரே அருமையான பதிவு. தொடருங்கள்..... வாழ்த்துக்கள்! கடவுளை நம்பி சோம்பேறியாய் இருபவனை விட தன்னை நம்பி முயற்சி செய்து வாழ்பவன் தான் மனிதன்.
Post a Comment