Friday, November 7, 2008

நான்

யார் நான்?
இப்படித்தான்
தனித்திருந்து இனித்திருந்த
பொழுதொன்றில்,

நான்-இற்குளிருந்தொரு
நான்-ஒன்று தன்
ஆத்ம விசாரணையை
ஆரம்பித்தது.
யார் நான்?

ரத்தமும் தசைப்பிண்டமும்
நித்தமும் நிழலாடும் - மன
சித்தமும் அதன் யுத்தமும்
பித்தமுமென்புமுள தோற்பையாம்.

நான்-இற்குளிருந்தின்னொரு
நான்-ஒன்று விடை பகர்ந்தது.
அதையேற்கமறுத்து
நான்-இற்குள்ளிருந்து
வெளியே குதித்தது
இன்னுமொரு நான்.

யுகந்தோறும் அவதரிப்பதாயில்லாமல்
தினந்தோறும், ஏன் கணந்தோறும்
கலங்கள் புதிதாய் ஜனிக்கையில்,
இன்றிருக்கும் நான் எப்படி
நேற்றிருந்த நான்-ஆகும்?

நான் எனப்படுவது யாதெனில்
எண்ணங்கள் கொண்ட பல
வண்ணக் கலவைகள் சேர்
கிண்ணமென்பதே திண்ணமாகும்.

கணக்குத் தெரிந்த அந்த முதல் நான்
பிணக்குப் பண்ணியது நிறுவிக்காட்டுமாறு.
சுணக்கமின்றிச் சொன்னதந்த நான்
இணங்கச் சொல் இந்த நான்-ஐ
நானதன் எண்ணவுடைகளைக் கலைத்துப்போட

எல்லா நான்-களுக்கும்
நான்-ஐ அறிவதில்
அலாதி ஆர்வமாதலால்
ஏகமனதுடன் ஏற்றுக்கொண்டன.

முதலிலொரு முதலிரவுப்பெண்ணின்
வெட்கமகற்றி ஆடையகற்றும்
நளினத்துடன், நகநுனி கூடத்
தீண்டாது நாகரிகமாய்த் தான்
எண்ணங்கள் சூழ்ந்திருந்த
நான்-ஐத் தீண்டவாரம்பித்ததந்த நான்.

நேரம் செல்லச் செல்ல
கோரப் பல் முளைத்து
விகாரப் பட்ட முகத்துடன்
நான்கங்குல நகமும் நீண்ட,
காடையன் ஒருவனின் காமவெறியுடன்
நகக்குறி, மற்றும் பற்குறி பதித்து
நான்-ஐச் சுற்றியிருந்த நினைவாடைகளை
கிழித்தெறியத் தொடங்கிப் பின்
களைத்து வீழ்ந்ததந்த நான்-ஐப் பார்த்து
கைகொட்டிச் சிரித்ததிந்த நான்-கள்.

நான்-ஆலா முடியாது?
அந்த நான்-இன் நான்;
அடங்க மறுத்தடம்பிடித்தது.
பெரியதாயொரு மண்வெட்டி
கொணர்ந்து பாளம்பாளமாய்
வெட்டியெறிந்ததந்த நான்
இந்த நான்-ஐ இவ்வளவு
நாட்களாய் சுற்றிவளைத்திருந்த
எண்ணத் திணிவுகளை.

ஈற்றில்,
இறுதிவெற்றியை அடையும்
உவகையுடன் மீந்திருந்த
ஒவ்வோரணுக்களையும் நோண்டி
அதன் இலத்திரன்களைப்
பிடித்திழுத்துவைத்து
சொறியத் தொடங்கியதந்த நான்.

துச்சாதனனுரித்துப் போட்ட
திரௌபதையின் துகிலாய்
திரண்டு கிடந்த,
அந்த நான் உரித்துப் போட்ட
நான்-களெல்லாம்,
கூக்குரலிட்டுக் கத்தின
“விடாதே, நான்-ஐக் கண்டுபிடி” என்று
அந்த நான்-இடம்.

புருவங்களுக்கு மத்தியில்
ஒளிந்திருக்கும் ஆத்மா(?)வாகிய
நான்-ஐக் கண்டறியப் போவதான
களிப்புடன் இறுதியணுவையும்
இலக்குவைத்து இயங்கத்
தொடங்கியதந்த நான்.

என்ன இருக்கிறது?
எப்படியிருக்கிறது?
ஆவலுடன் காத்திருந்த
உரித்துப் போடப்பட்ட
நான்-களிடம் அந்த நான்
சொல்லிற்று

“போடாங்... வெங்காயம்”

2 comments:

Barathyraj said...

“போடாங்... வெங்காயம்”

Anonymous said...

தேடப் படுகிறேன் நான் எனக்குள்ளிருக்கும் நான்களால்==>தேடாதே தொலைந்து விடுவாய் உன் நானை தேட உன் புலனின் ஊடாக உன் உணர்ச்சியை கணித்து மணிரத்தினத்தின் 7 ம் படி காதல் நிலையை அளிக்க உனக்கு ஒரு நல்ல மாது தேவை அப்போது தான் உலகத்தின் ஒவ்வொரு பொருளும் நீ என அறிவாய் அவள் நானையும் அறிவாய் ஆனால் அதை எல்லாம் வெளியில் சொல்லிக்கொண்டு இரதே...!! நாகரிகம் இல்லை....!!!!===>>>