Sunday, March 8, 2009

நான் சும்மா

அம்மாவும் அப்பாவும்
சும்மா இருக்கையில்
சும்மா இராததால்
சும்மா “நான்” ஜனித்தேன்

சும்மாவே பிறந்ததாலோ
சும்மா சும்மா அழுதேன்
சும்மா சும்மா அடம்பிடித்து
அம்மாவிற்குலை வைத்தேன்

சும்மா இருப்பது
“குவாகுவா” வென்றோ
“puppy shame” என்றோ
கேலிசெய்து,
சும்மாவிருந்தவென்னை
ஆடைகட்டி அழகுசெய்தர்
சும்மா படிக்க வைத்தர்
சும்மாவே வளர வைத்தர்

சும்மா சும்மாவென
எல்லாமே சும்மாவாய்...
அம்மாண “நான்“ -ஆல,
சும்மா இருக்கேலா.

சும்மா பொழுதுபோக
வலைப்பின்னல் நெய்தேன்
நண்பன் “call” எடுத்து
என்னப்பா செய்கிறாயாம்.
சும்மாவே சொன்னேன்
சும்மா தான் இருக்கிறேன்
சும்மா இருக்காதே
ஏதாவது செய்யென்றான்
என்னசெய்யவெனக் கேட்க
சும்மா ஏதாவது செய்யட்டாம்.

என்னைய்யா சும்மா?
எதுவையா சும்மா?
சும்மா உட்காந்து யோசிக்க
சும்மா சும்மா எண்ணங்கள்.

வாழ்க்கை சும்மா
வாலிபம் சும்மா
பிறப்பு சும்மா
இறப்பு சும்மா
சாமி சும்மா
சாத்தான் சும்மா
ஆண் சும்மா
பெண் சும்மா
அது சும்மா
இது சும்மா

எல்லாமே சும்மாவாய்
சும்மாவும் சும்மாவாய்
சும்மா சும்மா
சும்மா வளர்ந்தது.

காய்ந்த காட்டிடை
கக்கிய தீயதாய்
“நான்” இனை நோக்கியும்
சும்மா வந்தது.

சும்மா வந்தது
சுற்றி வளைத்தது.
சும்மாவிருந்த “நான““-ஐ
சூழ்ந்து நின்றெரித்தது.
எரிந்து முடிந்து
எஞ்சியதெதுவென
சும்மா பார்த்தேன்.
அட!
“சும்மா”.

நான் சும்மா
நீ சும்மா
போடா சும்மா.

Saturday, March 7, 2009

நான் சாட்சி

“நான்” இவ்வுலகிலோர் சாட்சி.
யொகோவாவின் சாட்சியாகவோ
அன்றி
”ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்”
என்பதுபோன்றொரு பக்கச் சார்பான
சாட்சியமாகவோ இல்லாமல்
நிதர்சனங்களின் தரிசனங்களின்
நித்திய சத்தியமாய்
“நான்”-இன் சாட்சியம்.

எந்தவொரு சட்டத்தையும்
சட்டை செய்யும் அவசியமோ,
கட்டுப்படும் நிர்ப்பந்தமோ,
அன்றி நெறிப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட வேண்டிய
தேவையினையோ தாண்டியது
“நான்”-இன் சாட்சியம்.

என் தாய்தந்தையின்
உறவிற்கான சாட்சியுடன்
“நான்”-இற்கான முதலாவது
சாட்சியம் ஆரம்பமாயிற்று.

முதற் “போணி”
நன்றாய்ப் போனதாலதன்
வியாபாரப் பேரேடும்
விரிந்துகொண்டே வளர்ந்தது.

பெற்றதுக்கு சாட்சியாய்
கற்றதுக்கு சாட்சியாய்
கற்பிற்கு சாட்சியாய்
காதலிற்கு சாட்சியாய்
நட்பிற்கு சாட்சியாய்
நாடலிற்கு சாட்சியாய்
குடலிற்கு சாட்சியாய்
கூடலிற்கு சாட்சியாய்
உடலிற்கு சாட்சியாய்
ஊடலிற்கும் சாட்சியாய்
சாட்சியம் சாட்சியம்
சாட்சியத்திற்கும் சாட்சியாய்...

ஏன்,
ஒரு பூவின் புன்னகைக்கு கூட
”நான்” சாட்சியமாய் இருக்கின்றேன்
தர்க்கங்கள் வர்க்கங்கள்
தாண்டிய சாத்திரஙகட்கபபால்....
நிர்வாணம் பூணவிரும்பி
அணிவிக்கப்பட்ட ஆடைகள் சில
அகற்றிவிட்டவொரு
நள்ளிரவு தாண்டிய
நடைப்பயணத்தில்,
ஒன்றல்ல இரண்டல்ல
ஒருநூறு மலர்கள்,
கொத்துக் கொத்தாக...
நாள்தோறும் நடந்து கடக்கின்ற
நந்தவனத்தின் சொந்த மலர்கள் தான்,
ஆனாலும் அன்றைக்கு மட்டுமே
அவை எனக்காய் முறுவலித்தன.
பின் என்னுடன் பேசவும் செய்தன.
கண்ணும் கண்ணும் கலந்தபின்
வாய்ச்சொல்லில என்ன பயனென்ற
வள்ளுவமொழி காதலர்க்கு மட்டுமல்ல.
என்பதற்குகூட அன்றைக்கு “நான்” சாட்சி

இன்றைக்குக் கூட முதன் முதலாய்
“நான்”-ஏ “நான்”-ஐ விட்டுப் பிரிந்து
பின் சிலவொரு கணப்பொழுதுகளில்
மீண்டு வந்ததற்கும் “நான்”-ஏ சாட்சி.

எந்தவொரு தருணத்திலும்
“நான்” ஒரு வாதியாகவோ
இல்லை பிரதிவாதியாகவோ
கூண்டில் நிறுத்தப்பட்டதில்லை.

ஆயினும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும்
அவ்வாறே “இந்த நான்” நினைத்ததுணடு.
அப்போதெல்லாம் “அந்த நான்” -இற்கு
செயலிற் செயலின்மையையும்
செயலின்மையிற் செயலையும்
காணும் பக்குவம் கனிந்திருக்கவில்லை.

இப்போதும்கூட இடையிடையே
காரிய மயக்கத்தில் அது தன்னையொரு
வாதியாகவோ அன்றி நீதித்தலைமையாகவோ
கற்பனையில் களிக்கிறது
காலத்தை வீணே கழிக்கிறது.
அதற்கும் கூட “நான்” தான் சாட்சி

Sunday, February 15, 2009

நான் - ஆயுள் கைதி

ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டவொரு
சிறைக்கைதி “நான்”.

“நான்” இற்கான சிறைகள்
அடிக்கடி இடம்மாறினாலும்,
மாற்றம் ஒன்றே மாறாதது போல்
சிறைவாழ்வு மட்டும் மாறாமல்.

இது,
“நான்” வரும்போதே வாங்கி
வந்த வரமா?
இல்லை சபிக்கப்பட்டதால்
இந்த வரவா?
என்பதில் இந்த
“நான்”-இற்குள்ளே
அடிக்கடி கைகலப்பு.

தண்டனைக் கைதியாயல்லாமலொரு
விசாரணைக் கைதியாய்தான்
கருவறையெனுமொரு
தனியான சிறையறையில்
“நான்” இற்கான சிறைவாசம்
ஆரம்பமாயிற்று.

எந்த நீதிமன்றில்
“நான்” இற்கான குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டதோ
சத்தியமாய் நானறியேன்.

இல்லை,
காலி, களுத்தறை
வெலிக்கடை, பிந்தனுவெவ
கைதிகள் போலவேயென்
சிறைவாழ்வும் ஆயிற்றோ
யாரொடு நோவேன்?

எது எப்படியோ
குற்றம் கூறப்படாமலேயே
“நான்” இற்கான தண்டனை
வழங்கப் பட்டாயிற்று.

ஆரம்பத்திலிதை
ஏற்றுக் கொள்ளாமல்
எதிர்த்தழுது ஆர்ப்பாட்டம்
செய்தபோதே
அன்னையெனும் வடிவிலாரம்பித்து
அன்புச்சங்கிலி கொண்டந்த “நான்” ஐப்
பிணைக்கத் தொடங்கினார்கள்.
தாங்களேயொரு சிறைக்கைதிகள்
என்றறியாதவர்களெல்லாம்.

நாளாக நாளாக
சொந்தமென பந்தமென
நட்பென நாடலென
காதலென கஷ்டமென
“நான்” இற்கான கட்டுகள்
அதிகமாயாயிற்று,
அது மேலும்
இறுக்கமாயுமாயிற்று

சுமைகளும் தளைகளும்
சுகமெனவே பட
சிறகுகள் வெட்டப்பட்ட
கூண்டுக் கிளியாகி
சிறைவாழ்வே சுவர்க்கமென்ற
சிந்தனையுமாயிற்று.

சிந்தனை கலைந்தவொரு
நித்திரைப் பொழுதின் கனவினிலே
விட்டு விடுதலையாகி எனக்கானவொரு
சுதந்திர உலகினைக் கண்டேன்.

உண்மைகள் உறைக்கவே
“நான்” உணரத் தொடங்கினேன்
உலகினை உய்த்தறிந்து
உய்யத் துடித்ததில் தெரிந்தது,

”நான்”-இற்கான உடைகளும்
உணவுகளும், ஏன்
உணர்வுகளும் கூடவிங்கே
திணிக்கப்பட்டதாயேயிருக்கிறது.

”நான்” ஆசைப்பட்ட
ஆடைகளை அணியவோ
அன்றி விரும்பிய வர்ணத்திலான
உடைகளை உடுத்தவோ
”நான்” இற்கான அனுமதி
மறுக்கப்பட்டதாயேயிருக்கிறது.

உள்ளப் புழுக்கம்
உண்டான போதெல்லாம்
நிர்வாணமாகவோ, இல்லை
ஆடைகள் குறைத்தோ
உலாவரவே “நான்”
ஆசைப்படுகிறேன்.

ஒப்பீடுகளும்
ஒத்துப்போதல்களுமின்றி
யாரால் முடியும்
”நான்” ஐ அவ்வாறே ஏற்க?

விதிகளை மீறுகின்றேனென்ற
குற்றச்சாட்டுக்ள் வேறு.
கலகக்காரன் “நான்” என
ஒதுக்கல்கள் வேறு.

எப்படியோ எனக்கு
விதிக்கப்பட்ட சிறைச்சாலை
இதுவேயென்ற ஈற்றுணர்வின்
ஒத்துப்போதலில்,

அணியத் தொடங்கினேன் ஆடைகளை
எனக்கெனத் தரப்பட்ட
வர்ணங்களில், வடிவங்களில்
“நான்” ஒருஆயுட்கைதியாய்.

Wednesday, February 11, 2009

நான் - நடிகன்

“நான்” ஒரு நடிகன்
நாளொரு நாடகமும்
பொழுதொரு வேடமுமாய்
அரிதாரம் தாங்குதலே
அவதார நோக்கமாய்...

எம்.ஜி.ஆர், சிவாஜி,
ரஜனி, கமல்,
விஜய், அஜித்,
சிம்பு, தனுஷ்
இவர்களா நடிகர்கள்?
இல்லை
சாருக்கான், ஜக்கிசான்
கிருத்திக்ரோஷன்,
சில்வஸ்ரர்ஸ்ரோலன்
இவர்களையா நடிகர் என்பாய்?

யாருக்கோவெல்லாம்
விசிறிகள் கூட்டம்
facebook-இல் கூட
அவர்களின் ஆட்டம்.

அடித்தது அதிர்ஷ்டம்
“கெசன்யா சுகினோவா” விற்கு,
நீயில்லாத உலகஅழகிப்போட்டி!

என்றொரு காதலன்
எழுதும் ஹைக்கூ-வாய்
இங்கே,

யாரையோவெல்லாம் சிபாரிசுசெய்கிறார்கள்
ஆஸ்கார் விருதுக்கு.
அமைதியாய் “நான்”!

இப்போது கூட,
ரோம் பற்றியெரிகையில்,
பிடில் வாசித்த நீரோ-வாய்
முல்லையில் மூங்கில்குருத்துகள்
மூசியெரிகையில்,
கொல்லையில் புல்லாங்குழல் கொண்டு
அடுப்பூதிப் பார்க்கும்
அரிதார புருஷன் “நான்”.

அழுகையொலியுடன் தான்
இத்திரையுலகிலென்
அறிமுகம் ஆரம்பமாயிற்று.

பெற்றவர் உற்றவர்
மற்றவர் எல்லாம்
கைதட்டி கைதூக்க
நடிப்புக் கலையெனக்கு
நன்றாகப் பட்டிற்று. அதுவெனக்கு
நன்றாகவும் பற்றிற்று.

நாளாக நாளாக
“நான்” கொண்ட கோலங்கள்
“நான்” ஆகி “நான்” ஆகி
எந்த “நான்”, “நான்”-இன் ”நான்”
என்றவொரு குழப்பத்தில்,
குழப்பத்தின் மயக்கத்தில்
“நான்”-களே “நான்”-ஆனேன்
நயம்பட்ட நடிகனானேன்.

மைந்தனாய், மருகனாய்,
மாமனாய், மச்சானாய்,
அண்ணனாய், தம்பியாய்
நண்பனாய், பகைவனாய்,
நல்லவொரு தலைவனாய்,
நனிசிறந்த தொண்டனாய்,
நயம் கெட்ட வஞ்சனாய்,
அன்பனாய், அரக்கனாய்,
அறிவுகெட்ட மூடனாய்,
கள்ளனாய், கயவனாய்,
கைவிட்ட காதலனாய்,
கரம்பிடித்த கணவனாய்,
தந்தையாய்ப் பாட்டனாய்...

எல்லாப் பிறப்பும்
பிறந்திளைத்த வாதவூரனாய்
எல்லா வேடமும்
தரித்திளைத்த வேடதாரி “நான்”.

காலகாலமாய்
நடித்துவரும் என்நடிப்பை
நடிப்பாய்ப் பார்க்காமல்
பார்வையாளர் எல்லாமேயென்
பாத்திரத்துடன் ஒன்றிவிட்டதால்,
ஊரறியாமல் உலகறியாமலொரு
அரிதார புருஷன்
அவதார புருஷனாய்...

Sunday, January 11, 2009

நான் - தாயுமானவன்

விடுமுறையென
சொல்லப் படுகின்ற
நாளொன்றில்
அல்லும் பகலும்
இல்லாமல் இந்தக்
காலப் பரிமாணம்
சூனியமாகிப் போகாதா
என்கின்றவொரு
ஏக்கம் சூழ்ந்திருந்த
மாலை நேரத்தில்,

ஓடு ஓடு தேடு தேடு
என மூளைக்குள்ளொரு
“விழிப்பு மணி” விசிலடிக்கவென்
மனக்குழந்தை வீரிட்டலறியது.

தாலாட்டுப் பாடல்
சரிப்பட்டு வராததால்
உலாத்தலுக்கு கிளம்பினேன்
உள்ளக் குழவியுடன்.

வீதிவழி நடந்து
பாதியிடம் கடக்கையிலே
அருகிருந்த பூங்காவில்
அமர விரும்பியது.

வாஞ்சையுடன் மார்சாய்த்து
தோள்தட்டி தூங்கவைக்க,
பூஞ்சையான கண்ணுடன்
வயதாகி நோயாகி
பிறையாக கூன்விழுந்த
முன்னைநாள் குமர் காண,
மீண்டும் மனச்சிசு - தன்
உறக்கம் துறந்து என்
பிடரியைப் பிடித்து
நெட்டித் தள்ளியது.

ஓடு ஓடு தேடு தேடு
நித்திரை கலைந்த
நித்தில மகவின்
நித்தியத் தொந்தரவு.

இப்போது அதுகொஞ்சம்
வளர்ந்தே இருப்பதால்
கண்வளர வைப்பதெல்லாம்
கடினமாயிருக்கிறது.
குதர்க்கமாய் வேறு
குசும்புக் கேள்விகள்.

எங்கே குஞ்சு - என்னை
ஓடச் சொல்கிறாய்?
எதைக் கண்ணா - எனைத்
தேடச் சொல்கிறாய்?

எங்கே ஓடணுமோ
அங்கே ஓடு
எதைத் தேடணுமோ
அதைத் தேடு.

அவை தெரியாமல் தானே
அலை மோதுகிறேன்
நெஞ்சு தடுமாறுகிறேன் - அந்தப்
பிஞ்சிடம் சொன்னேன்.

இவை தெரியாமல்
எதற்காய் நீயெனைப் பெற்றாய்?
எதற்காயெனை வளர்க்கிறாய்?
பிள்ளை மனம் கல்லானது.

பெற்ற மனம் பித்தாகி
பிள்ளைக்கு பிராக்கு காட்ட,
கேள்விகள் கொண்டொரு
வேள்வி தொடங்கியதந்தசிசு.

யார் நீ?
உனை ஈன்றெடுத்தவுன் தாய்

உண்மையைச் சொல். எதற்காகவெனைப் பெற்றாய்?
முயங்கிய வேளையில் கலவியின்பம் என்னுள் காட்டாறாய் பெருக்கெடுத்த மயக்கத்தில்.

கூடிய பொழுதினில் என் ஜனிப்பினை நினைத்தாயா?
எதிர்பார்த்தேன், ஆனால் இப்படியல்ல.

வேறெப்படி?
சொல்வழி கேட்கும் செல்லக்குட்டியாய்

அப்போ, இப்போது என்ன நினைக்கிறாய்?
அவரசப்பட்டு விட்டேனோவென. சில சமயங்களில்,
நீ உறங்கமறுத்து அடம் பிடிக்கும் வேளைகளில்.

ஏனப்படி?
நீ என்னை ஓடச் சொல்லகிறாய். தேடவும் சொல்கிறாய்.

எங்கே ஓடச் சொல்கிறேன்? எதைத் தேடச் சொல்கிறேன்?
அவற்றைத்தான் நீ சொல்கிறாயே இல்லையே.

இன்னுமா புரியவில்லை?
தேடப்படுவதை நோக்கி ஓடச்சொல்கிறாய் என்பது மட்டுமே புரிகிறது.

சரி. இதற்கு முதல் என்ன செய்து கொண்டிருந்தாய்?
தேடி ஓடிக் கொண்டிருந்தேன்.

எதை நோக்கி?
படிப்பு, பட்டம், மதிப்பு, மரியாதை, பொன், பொருள்,
அன்பு, அரவணைப்பு, காதல், காமம்
இப்படிப் பலவற்றை நோக்கி

இவையனைத்தையும் நோக்கி ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டிருந்தாயா?
இல்லை. வெவ்வேறு காலப்பகுதிகளில்.

ஏன் அப்படி?
சில வேளைகளில் கிடைத்தவை கசந்தன.
சிலவேளைகளில் கிடைக்காதவை கசந்தன.
சிலவற்றில் கிடைத்தபின் ஆர்வம் குறைந்தது.
சிலவற்றில் கிடைக்க முதலே ஆர்வம் குறைந்தது.
ஆனாலும் ஓடலும் தேடலும் தொடர்ந்து கொண்டேயிருந்தது
வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு பொருட்களில்.

அப்படியா ஏன்?
சரியாகத் தெரியாது.
நான் நினைக்கிறேன்,
அவை அநித்தியமானதாயிருப்பதால் அப்படியிருக்கலாம்.

அப்போ எல்லாமே அநித்தியமானது தானா?
அப்படி நான் நினைக்கவில்லை.
இந்த அநித்தியங்களின் பின்னால் ஏதோவொன்று
நித்தியமானதாயிருத்தல் வேண்டும்.

எது அந்த நித்தியம்?
தெரியவில்லை

தெரியவில்லையென்றால்?
இதென்ன கேள்வி, தெரியவில்லையென்றால் தெரியவில்லை தான்.

அப்போ உனக்குத் தெரியவில்லையென்றால் நித்தியமானதென்று ஒன்று இல்லையா?
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

குழப்பாதே. இருக்கா? இல்லையா?
எனக்குத் தெரியாது.

நீதானே சற்று முதல் இருக்கவேண்டும் என்று சொன்னாய்.
பின் இப்போது ஏன் தெரியாதென்கிறாய்?
நான் காணவில்லை.

நீ காணவில்லையென்றால் இருக்க முடியாதா?
காணாததை என்னால் நம்ப முடியாது.

காற்றை, ஒலியை இருப்பதாய் ஏற்றுக் கொள்கிறாயா?
ஓம்.

இவற்றைக் கண்டிருக்கிறாயா?
இல்லை. ஆனால் உணரக் கூடியதாயிருக்கிறது.

அப்போ நித்தியம்?
அதைக் காணவும் இல்லை. உணரவும் இல்லை.

நீ காணாததும் உணராததும் இவ்வுலகில் இல்லையென்றாகி விடுமா?
இல்லை.

அப்போ?
அதற்காக இருக்கென்றும் ஆகிவிடாது.

சரி ஒன்று இருக்கா இல்லையாவென்பது எப்படித் தெரியும்?
அதைக் கண்டுபிடித்தால் அது இருப்பதை அறிந்து விடலாம்.

எப்படிக் கண்டுபிடிப்பது?
அட! தேடி.

அப்ப தேடு.

என்னை எழுப்பி விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தது என் மனக்குழந்தை.

Friday, December 5, 2008

நான் - மாயை

வந்திட்டியா?
வாடா வா...
தெரியும் நீ வருவாயென
வரவழைத்தவனே “நான்” தானே

கடவுளை சாத்தானாகவும்
சாத்தானை கடவுளாகவும்
கடவுளை கடவுளாகவும்
சாத்தானை சாத்தானாகவும்
காட்டிச் சிரிப்பவன் “நான்”

மழலை மொழியினில்
குழந்தையின் புன்சிரிப்பில்
குறும்புக் குழப்படியில், அதன்
குறுக்குமறுக்கு ஓட்டத்தில்
குசும்பாய் உனைப்பார்த்து
குதூகலிக்கச் செய்பவன் “நான்”.

அழகிய ஆரணங்கின்
கன்னக் குழியழகில்
கருநாகக் குழலழகில்
சின்ன இடையழகில்
சிக்கென்ற பின்னழகில்
மதர்த்த மாரழகில்
மயக்கும் விழியழகில்
வாழைத்தண்டுக் காலழகில்
ஆழிப்பேரலையாய்
உனை மயக்கி பின்
உன் வாழ்பாவவன் “நான்”.

நகக்கணுக்கள் சீழ்ப்பிடித்து
அறுந்து தொங்கும்
தொழுநோயாளி விரலழகில்
நரைதிரைகூன் விழுந்து
இரைதேடி இரந்துவாழும்
இம்சைப்பட்ட ஜீவனில்
அருவருக்க வைப்பவன் “நான்”.

சிலரைப் பொன் காட்டி
சிலரைப் பொருள் காட்டி
சிலரைப் பெண் காட்டி
சிலரை மண் காட்டி
பலரைப் பணம் காட்டி
பயம் காட்டி பவ்லா காட்டி
பண்பு காட்டி பணத்தைக் காட்டி
அன்பு காட்டி அருளைக் காட்டி
கருணை காட்டி காதல் காட்டி
கடைசியில் பேய்க்காட்டி
பல காட்சிகள் தருபவன் “நான்”.

மயக்கித் தெளித்து,
தெளித்துக் குழப்பி,
குழப்பிக் கலக்கி,
கலக்கி மயக்கி.....

கலைத்துக் குலைத்து,
குலைத்துச் சீராக்கி,
சீராக்கி நேராக்கி
நேராக்கிக் கலைத்து....

களைத்து விழுந்து
விழுந்து எழுந்து
எழுந்து நிமிர்ந்து
நிமிர்ந்து களைத்து....

கலந்து சேர்த்து
சேர்த்துக் கலந்து
கலந்து கலந்து
சேர்த்து சேர்த்து....

“போடா சாம்பாறு”

Friday, November 21, 2008

நான் - சாத்தான்

ஹாய்!
என்ன?
பொழுது போகலையா?
சோம்பல் வருகிறதா?

வா!
உன்னைத் தான்
தேடிக் கொண்டிருக்கும்
உன் உயிர்த்தோழன்
சாத்தான் “நான்”.

எப்படி
நேரேற்றத்திற்கு எதிரேற்றமுண்டோ,
வடமுனைவுக்கு தென்முனைவுண்டோ,
அப்படியே இறைவனுக்கு எதிர்மறையாய்
அவன் பிடியிலிருந்து
மீட்டு உனை இரட்சிப்பதற்காயான,
இயற்கையின் மறுபுள்ளி “நான்”.

நீ தேடியலையாமலே
உனைத்தேடி
“பல வடிவங்களில்”
வருபவன்
“நான்” மட்டுமே.

ஏதேன் தோட்டத்தில்
ஏவாளுடனான “என்”
முதற் சந்திப்புடன்
உனக்கு “என்” அறிமுகம்
ஆரம்பித்திருக்கலாம்.

ஆதாம் ஆப்பிள்
கடித்திருக்காவிடின்
இப்போதுகூட நீ
ஆண்டவன் சொற்கேட்பதான
ஆணவத்துடன்
அம்மணமாய்....

பைபிளின்
பழைய ஏற்பாட்டுடன்
சூரியன் புவியைச்
சுற்றுவதான அறியாமையுடன்...

உனக்குள் இருந்த
ஊற்றுக் கண்ணை
திறந்து விட்டவன் “நான்”

இன்று சந்திரனுக்கு
சந்திராயன் அனுப்பிவிட்ட
ஆனந்தக் களிப்பையும்
தந்தவன் “நான்”

“நான் நிரந்தரமானவன்
எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை” - என்று
கண்ணதாசனை கவிசொல்ல
வைத்தவனும் “நான்” தான்.

சிலருக்கு “நான்”
முதலிலொரு
மதுவில் தரிசனம் தருவேன்
பின் கால்(ா) முளைக்கவொரு
காரிகையிலாவேன்.

பலருக்கு “நான்”
கோபத்தின் வெளிப்பாடாய்
Ego -வில் தெரிவேன்.
பின்னாளில் அவர்கள் “என்”
பக்தர்களாவார்கள்.

அட நீயும் “என்”
தொண்டனாகவா
ஆசைப்படுகிறாய்?

“நான்” என்ன “நீ” என்ன
எல்லாமே “நான்” தான்.

“வாடா என் வெட்டிப்பயலே”

*************************

சும்மா வெட்டியாயிருப்பது எனப்படுவது யாதெனில்
சாத்தானாகிய எனைநோக்கி கடுந்தவம் புரிவதாகும்.