Sunday, February 15, 2009

நான் - ஆயுள் கைதி

ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டவொரு
சிறைக்கைதி “நான்”.

“நான்” இற்கான சிறைகள்
அடிக்கடி இடம்மாறினாலும்,
மாற்றம் ஒன்றே மாறாதது போல்
சிறைவாழ்வு மட்டும் மாறாமல்.

இது,
“நான்” வரும்போதே வாங்கி
வந்த வரமா?
இல்லை சபிக்கப்பட்டதால்
இந்த வரவா?
என்பதில் இந்த
“நான்”-இற்குள்ளே
அடிக்கடி கைகலப்பு.

தண்டனைக் கைதியாயல்லாமலொரு
விசாரணைக் கைதியாய்தான்
கருவறையெனுமொரு
தனியான சிறையறையில்
“நான்” இற்கான சிறைவாசம்
ஆரம்பமாயிற்று.

எந்த நீதிமன்றில்
“நான்” இற்கான குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டதோ
சத்தியமாய் நானறியேன்.

இல்லை,
காலி, களுத்தறை
வெலிக்கடை, பிந்தனுவெவ
கைதிகள் போலவேயென்
சிறைவாழ்வும் ஆயிற்றோ
யாரொடு நோவேன்?

எது எப்படியோ
குற்றம் கூறப்படாமலேயே
“நான்” இற்கான தண்டனை
வழங்கப் பட்டாயிற்று.

ஆரம்பத்திலிதை
ஏற்றுக் கொள்ளாமல்
எதிர்த்தழுது ஆர்ப்பாட்டம்
செய்தபோதே
அன்னையெனும் வடிவிலாரம்பித்து
அன்புச்சங்கிலி கொண்டந்த “நான்” ஐப்
பிணைக்கத் தொடங்கினார்கள்.
தாங்களேயொரு சிறைக்கைதிகள்
என்றறியாதவர்களெல்லாம்.

நாளாக நாளாக
சொந்தமென பந்தமென
நட்பென நாடலென
காதலென கஷ்டமென
“நான்” இற்கான கட்டுகள்
அதிகமாயாயிற்று,
அது மேலும்
இறுக்கமாயுமாயிற்று

சுமைகளும் தளைகளும்
சுகமெனவே பட
சிறகுகள் வெட்டப்பட்ட
கூண்டுக் கிளியாகி
சிறைவாழ்வே சுவர்க்கமென்ற
சிந்தனையுமாயிற்று.

சிந்தனை கலைந்தவொரு
நித்திரைப் பொழுதின் கனவினிலே
விட்டு விடுதலையாகி எனக்கானவொரு
சுதந்திர உலகினைக் கண்டேன்.

உண்மைகள் உறைக்கவே
“நான்” உணரத் தொடங்கினேன்
உலகினை உய்த்தறிந்து
உய்யத் துடித்ததில் தெரிந்தது,

”நான்”-இற்கான உடைகளும்
உணவுகளும், ஏன்
உணர்வுகளும் கூடவிங்கே
திணிக்கப்பட்டதாயேயிருக்கிறது.

”நான்” ஆசைப்பட்ட
ஆடைகளை அணியவோ
அன்றி விரும்பிய வர்ணத்திலான
உடைகளை உடுத்தவோ
”நான்” இற்கான அனுமதி
மறுக்கப்பட்டதாயேயிருக்கிறது.

உள்ளப் புழுக்கம்
உண்டான போதெல்லாம்
நிர்வாணமாகவோ, இல்லை
ஆடைகள் குறைத்தோ
உலாவரவே “நான்”
ஆசைப்படுகிறேன்.

ஒப்பீடுகளும்
ஒத்துப்போதல்களுமின்றி
யாரால் முடியும்
”நான்” ஐ அவ்வாறே ஏற்க?

விதிகளை மீறுகின்றேனென்ற
குற்றச்சாட்டுக்ள் வேறு.
கலகக்காரன் “நான்” என
ஒதுக்கல்கள் வேறு.

எப்படியோ எனக்கு
விதிக்கப்பட்ட சிறைச்சாலை
இதுவேயென்ற ஈற்றுணர்வின்
ஒத்துப்போதலில்,

அணியத் தொடங்கினேன் ஆடைகளை
எனக்கெனத் தரப்பட்ட
வர்ணங்களில், வடிவங்களில்
“நான்” ஒருஆயுட்கைதியாய்.

4 comments:

கிடுகுவேலி said...

"நான்" இற்கான தேடலும் அதற்கான விரைதலும் நன்றாகவே உள்ளது. "நான்" இனைத் தேடித்தேடி அதற்குள் தொலைந்து போக வேண்டாம். இலக்கியத்தேடல் ஆக இருந்தால் நன்று. மானுடத்தேடல் ஆக இருந்தால்...................!

Anonymous said...

நீ, ஆயுட் கைதி என்னும் ஆடைகளை உனக்கு தரப்பட்ட வர்ணங்களில், வடிவங்களில் அணிந்து உனது அம்மணத்துக்கு விளம்பரம் தேடுகின்றாய்....!!!!!


இப்படிக்கு உன் அன்பு நிர்வாண நிபுணர்==>A.G

Rahavan said...

ePu; MAl; ifjpaha; ,Uf;Fk; tiu jhd; ,e;j khDl cyfpd; mq;fk;. Nfhtzk; mzpah khe;ju; $l;lj;Js; MilAld; ,Ue;jhy; gupfhrk; jhd;. ,e;j cyfj;jpy; tho mtu;fs; Vw;Fk; Milfis mzptijj; jtpu NtW topapy;iy.

வலசு - வேலணை said...

வரவிற்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்!!!

rav said...
நீர் ஆயுட் கைதியாய் இருக்கும் வரை தான் இந்த மானுட உலகின் அங்கம். கோவணம் அணியா மாந்தர் கூட்டத்துள் ஆடையுடன் இருந்தால் பரிகாசம் தான். இந்த உலகத்தில் வாழ அவர்கள் ஏற்கும் ஆடைகளை அணிவதைத் தவிர வேறு வழியில்லை.