Sunday, January 11, 2009

நான் - தாயுமானவன்

விடுமுறையென
சொல்லப் படுகின்ற
நாளொன்றில்
அல்லும் பகலும்
இல்லாமல் இந்தக்
காலப் பரிமாணம்
சூனியமாகிப் போகாதா
என்கின்றவொரு
ஏக்கம் சூழ்ந்திருந்த
மாலை நேரத்தில்,

ஓடு ஓடு தேடு தேடு
என மூளைக்குள்ளொரு
“விழிப்பு மணி” விசிலடிக்கவென்
மனக்குழந்தை வீரிட்டலறியது.

தாலாட்டுப் பாடல்
சரிப்பட்டு வராததால்
உலாத்தலுக்கு கிளம்பினேன்
உள்ளக் குழவியுடன்.

வீதிவழி நடந்து
பாதியிடம் கடக்கையிலே
அருகிருந்த பூங்காவில்
அமர விரும்பியது.

வாஞ்சையுடன் மார்சாய்த்து
தோள்தட்டி தூங்கவைக்க,
பூஞ்சையான கண்ணுடன்
வயதாகி நோயாகி
பிறையாக கூன்விழுந்த
முன்னைநாள் குமர் காண,
மீண்டும் மனச்சிசு - தன்
உறக்கம் துறந்து என்
பிடரியைப் பிடித்து
நெட்டித் தள்ளியது.

ஓடு ஓடு தேடு தேடு
நித்திரை கலைந்த
நித்தில மகவின்
நித்தியத் தொந்தரவு.

இப்போது அதுகொஞ்சம்
வளர்ந்தே இருப்பதால்
கண்வளர வைப்பதெல்லாம்
கடினமாயிருக்கிறது.
குதர்க்கமாய் வேறு
குசும்புக் கேள்விகள்.

எங்கே குஞ்சு - என்னை
ஓடச் சொல்கிறாய்?
எதைக் கண்ணா - எனைத்
தேடச் சொல்கிறாய்?

எங்கே ஓடணுமோ
அங்கே ஓடு
எதைத் தேடணுமோ
அதைத் தேடு.

அவை தெரியாமல் தானே
அலை மோதுகிறேன்
நெஞ்சு தடுமாறுகிறேன் - அந்தப்
பிஞ்சிடம் சொன்னேன்.

இவை தெரியாமல்
எதற்காய் நீயெனைப் பெற்றாய்?
எதற்காயெனை வளர்க்கிறாய்?
பிள்ளை மனம் கல்லானது.

பெற்ற மனம் பித்தாகி
பிள்ளைக்கு பிராக்கு காட்ட,
கேள்விகள் கொண்டொரு
வேள்வி தொடங்கியதந்தசிசு.

யார் நீ?
உனை ஈன்றெடுத்தவுன் தாய்

உண்மையைச் சொல். எதற்காகவெனைப் பெற்றாய்?
முயங்கிய வேளையில் கலவியின்பம் என்னுள் காட்டாறாய் பெருக்கெடுத்த மயக்கத்தில்.

கூடிய பொழுதினில் என் ஜனிப்பினை நினைத்தாயா?
எதிர்பார்த்தேன், ஆனால் இப்படியல்ல.

வேறெப்படி?
சொல்வழி கேட்கும் செல்லக்குட்டியாய்

அப்போ, இப்போது என்ன நினைக்கிறாய்?
அவரசப்பட்டு விட்டேனோவென. சில சமயங்களில்,
நீ உறங்கமறுத்து அடம் பிடிக்கும் வேளைகளில்.

ஏனப்படி?
நீ என்னை ஓடச் சொல்லகிறாய். தேடவும் சொல்கிறாய்.

எங்கே ஓடச் சொல்கிறேன்? எதைத் தேடச் சொல்கிறேன்?
அவற்றைத்தான் நீ சொல்கிறாயே இல்லையே.

இன்னுமா புரியவில்லை?
தேடப்படுவதை நோக்கி ஓடச்சொல்கிறாய் என்பது மட்டுமே புரிகிறது.

சரி. இதற்கு முதல் என்ன செய்து கொண்டிருந்தாய்?
தேடி ஓடிக் கொண்டிருந்தேன்.

எதை நோக்கி?
படிப்பு, பட்டம், மதிப்பு, மரியாதை, பொன், பொருள்,
அன்பு, அரவணைப்பு, காதல், காமம்
இப்படிப் பலவற்றை நோக்கி

இவையனைத்தையும் நோக்கி ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டிருந்தாயா?
இல்லை. வெவ்வேறு காலப்பகுதிகளில்.

ஏன் அப்படி?
சில வேளைகளில் கிடைத்தவை கசந்தன.
சிலவேளைகளில் கிடைக்காதவை கசந்தன.
சிலவற்றில் கிடைத்தபின் ஆர்வம் குறைந்தது.
சிலவற்றில் கிடைக்க முதலே ஆர்வம் குறைந்தது.
ஆனாலும் ஓடலும் தேடலும் தொடர்ந்து கொண்டேயிருந்தது
வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு பொருட்களில்.

அப்படியா ஏன்?
சரியாகத் தெரியாது.
நான் நினைக்கிறேன்,
அவை அநித்தியமானதாயிருப்பதால் அப்படியிருக்கலாம்.

அப்போ எல்லாமே அநித்தியமானது தானா?
அப்படி நான் நினைக்கவில்லை.
இந்த அநித்தியங்களின் பின்னால் ஏதோவொன்று
நித்தியமானதாயிருத்தல் வேண்டும்.

எது அந்த நித்தியம்?
தெரியவில்லை

தெரியவில்லையென்றால்?
இதென்ன கேள்வி, தெரியவில்லையென்றால் தெரியவில்லை தான்.

அப்போ உனக்குத் தெரியவில்லையென்றால் நித்தியமானதென்று ஒன்று இல்லையா?
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

குழப்பாதே. இருக்கா? இல்லையா?
எனக்குத் தெரியாது.

நீதானே சற்று முதல் இருக்கவேண்டும் என்று சொன்னாய்.
பின் இப்போது ஏன் தெரியாதென்கிறாய்?
நான் காணவில்லை.

நீ காணவில்லையென்றால் இருக்க முடியாதா?
காணாததை என்னால் நம்ப முடியாது.

காற்றை, ஒலியை இருப்பதாய் ஏற்றுக் கொள்கிறாயா?
ஓம்.

இவற்றைக் கண்டிருக்கிறாயா?
இல்லை. ஆனால் உணரக் கூடியதாயிருக்கிறது.

அப்போ நித்தியம்?
அதைக் காணவும் இல்லை. உணரவும் இல்லை.

நீ காணாததும் உணராததும் இவ்வுலகில் இல்லையென்றாகி விடுமா?
இல்லை.

அப்போ?
அதற்காக இருக்கென்றும் ஆகிவிடாது.

சரி ஒன்று இருக்கா இல்லையாவென்பது எப்படித் தெரியும்?
அதைக் கண்டுபிடித்தால் அது இருப்பதை அறிந்து விடலாம்.

எப்படிக் கண்டுபிடிப்பது?
அட! தேடி.

அப்ப தேடு.

என்னை எழுப்பி விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தது என் மனக்குழந்தை.

4 comments:

கிடுகுவேலி said...

வணக்கம் வலசு,
தேடல் என்பது எல்லோரிடமும் உண்டு. எதை தேடுகிறார்கள் என்பதிலும், எப்படித்தேடுகிறார்கள் என்பதிலும் எல்லாம் மாறுகின்றன. ஆனால் நீங்கள் அற்புதமான ஒன்றை தேட முற்படுகிறீர்கள். அருமையாக உள்ளது. கவி நடை நன்றாக கைவருகிறது. முயற்சிகள் தொடருட்டும். வாழ்த்துக்கள். (உங்கள் வலைப்பூவிற்கான இணைப்பை என்னுடைய 'கிடுகுவேலி' யில் தொங்க விட்டுள்ளேன்)

Anonymous said...

வணக்கம் வலசு...
அருமையான தத்துவம்... அழகாக சொல்லியுள்ளீர்கள்... உபநிடதம் படித்ததுபோல் உணர்வு. ஆனால், இந்த தேடல் கவிதை வடிவில் வலைப்பூ வரையில் வேலிகட்டி நின்றால் நலம். அதையும் தாண்டினால் உங்கள் வலைப்பூ பெயரே உங்கள் நிஜப் பெயராய் மாறிவிடலாம்... கவனம்..!

-ஜேனா.

Anonymous said...

yes, there is no an end to search. What u have find is exist already.

Anonymous said...

உண்மை என்பதில் உள்ள பெரிய குறைபாடு அது தெரிந்த வரை தான் உண்மை, இதை பொய் என்று சொல்பவன் தான் இந்த வலசு......!!!!